Thursday, September 25, 2008

458. கெட்ட போலீஸும் நல்ல போலீஸும்

இரண்டு வாரங்களுக்கு முன் ஜுனியர் விகடனில் வந்த கட்டுரை இது. இதை வாசித்தவுடன் மனது சற்றே கலங்கி விட்டது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தக்க சமயத்தில் உதவிய ஜு.வி பத்திரிகையையும், உடனடி நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியையும் மனதார பாராட்ட வேண்டும். வாசியுங்கள்:
*************************************************************
சில நாட்களுக்கு முன்பு நம்முடைய அலுவலக தொலைபேசி நீண்ட நேரம் அலற... எடுத்து ஹலோ சொன்னோம்.

உடைந்து சிதறியது ஒரு குரல்...

''சார் என் பெயர் அனுராதா... சென்னை எழும்பூரில் இருந்து பேசறேன். போன்ல பேசமுடியாத நிலைமை. எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வர்றீங்களா?''

-அந்தக் குரலில் தெரிந்த பதற்றத்துக்கு மதிப்பளித்து எழும்பூர் விரைந்தோம். போனில் சொன்ன அடையாளங் களோடு அனுராதாவை சந்தித்தோம்.

''சார், இதை சொல்றதுல எனக்கு அவமானமோ கூச்சமோ இல்ல. சொல்லப்போனா,

இந்த சமூகம்தான் கூச்சப்படணும். அஞ்சு வருஷத்துக்கு முந்தி நான் விபசாரத் தொழில் செஞ்சேன். என் கணவர் தெனமும் குடிச்சுக்கிட்டே இருப்பாரு. ரெண்டு பெண் குழந்தைங்களைக் காப்பாத்தறதுக்கு வேற வழி தெரியாம ஒரு வேலைக்குப் போனேன். அங்கே என்னை வற்புறுத்தி இந்தத் தொழில்ல இறக்கிட்டாங்க.

உடம்பு முழுசும் உறுத்தலோடுதான் இந்த தொழிலையே செஞ்சேன். என் கணவர் திருந்தி வேலைக்கு போக ஆரம்பிச்சாரு. நானும் இந்தத் தொழிலை விட்டுட்டேன். நாலு வருஷமா வேற நல்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். எல்லாத்தையும் மறந்து என் வாழ்க்கையில கொஞ்சநாள்தான் நிம்மதியா இருந்தேன். ஆனா...'' என்ற அனுராதாவின் கண்கள் ஈரங்கோத்தன.

''போன ஆகஸ்ட் 25-ம் தேதி, சாயங்காலம் 6.30 மணிக்கு இரண்டு பேரு வீட்டுக் கதவைத் தட்டினாங்க. கதவைத் திறந்ததுமே உள்ள நுழைஞ்சு, 'நாங்க போலீஸ§. வீட்டை சோதனை போடனுணும்'னு சொன்னாங்க. என் பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க. திடீர்னு அந்த ரூமை வெளிப்பக்கமா தாழ்ப்பாள் போட்டாங்க. 'சார், என் பொண்ணுங்க சத்தியமா சொல்றேன்... நான் தொழிலை விட்டுட்டேன். என்னை நம்புங்க'னு சொன்னேன். அதுல ஒருத்தர், பளாருன்னு கன்னத்துல அடிச்சாரு. 'ஏண்டி... பத்தினி வேஷம் போடறியா? உன் பசங்க படிக்கற ஸ்கூல்ல போய், நீ யாருன்னு சொல்லவா'னு மிரட்டினாரு. 'இந்த வீட்டை சீல் வச்சுட்டு, உன் மேல் கேஸ் போட்டா என்ன பண்ணுவ? நீதான் தொழில் செய்யறீயே, மாமூல் தரமாட்டீயா?'னு கேட்டாங்க. அழுது புரண்டேன். பீரோ சாவியைக் கேட்டாங்க. அது திறந்துதான் இருக்குன்னு சொன்னேன். அதுலருந்த ஏழாயிரம் ரூபாயை எடுத்துக்கிட்டாங்க. 'இது பத்தாது, மொத்தமா அஞ்சு லட்சம் கொடுடி'னு கேட்டாங்க. அவ்ளோ இல்லைன்னு சொன்னதும், மூணு லட்சம் கேட்டாங்க. கடைசியா, ஒரு லட்சம் கேட் டாங்க. பணமே இல்லைன்னு பேங்க் பாஸ் புத்தகத்தையும் காட்டிட்டேன்.

கடைசியில கழுத்துல கெடந்த தாலி செயினைக்கூட அந்தப் பாவிங்க விடல. வீட்டுக்கு வெளியே போய் இருங்கன்னு சொல்லிட்டு, பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்த ரூமுக்கு போனேன். பெரியம்மா வீட்டு வரைக் கும் போயிட்டு வந்துடறதா சொல்லி, வெளியே இருந்த ஆளுங்களோட ஆட்டோவுல போனேன். தாலி சங்கிலியை வித்து, 30 ஆயிரத்து 450 ரூபாய் கொடுத்தேன். எனக்கு ஆட்டோவுக்காக 100 ரூபாய் கொடுத்தாங்க. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் போன் செஞ்சி 'நாளைக்கு 70 ஆயிரம் தரணும். இல்லன்னா, உன் வீட்டுக்காரன்கிட்டேயும் பசங்ககிட்டேயும் விஷயத்தை சொல்லிடுவோம்'னு மிரட்டினாங்க. வேற வழியில்லாமதான் சார், உங்களுக்கு போன் பண்றேன். போலீஸ§க்குப் போனா, எனக்கு வழி கிடைக்காது'' என்ற அனுராதாவின் கண்ணீருக்கு அணை போட முடியவில்லை.

அனுராதாவின் அவலத்தை உடனே மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்துக்குத் தெரியப்படுத்தினோம். அனுராதாவிடம் போன் செய்து, 70 ஆயிரம் ரூபாய் கேட்டவனின் மொபைல் எண்ணைப் பெற்று, இணை கமிஷனரிடம் கொடுத்தோம்.

அவர் எடுத்த துரித நடவடிக்கையால், மறுநாள் 26-ம் தேதி இரவே விபசார தடுப்புப் பிரிவு போலீஸ்காரர் களான பாஸ்கரன், மனோகரன் இருவரும் பிடிபட்டனர். அதிர்ந்துபோன இணை கமிஷனர், உடனடியாக கமிஷனர் சேகர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார்.

தொடர்ந்த விசாரணையில்... அந்த போலீஸாரோடு வக்கீல் ஒருவரும் சிக்கினார். அவர் தற்போது ஒரு அரசு வக்கீலிடம் ஜூனியராக இருந்து வருகிறார். நடந்த சம்பவங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் கமிஷனர் சேகர். இந்த விசாரணையை, மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி நடத்தி முடித்து, கமிஷனருக்கு அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

அனுராதாவிடம் இருந்து, 'பணப்பறிப்பு' செய்தது ஊர்ஜிதமானதும் உடனடி நடவடிக்கையாக பாஸ்கரன், மனோகரன் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், தலைமைக் காவலர்கள் அரிகிருஷ்ணன், குமார் ஆகியோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாஸ்கரனும், மனோகரனும் அனுராதாவின் வீட்டில் எடுத்த ஏழாயிரம் ரூபாயையும், மார்வாடி கடையில் விற்கப்பட்ட தாலி சங்கிலியையும் போலீஸார் மீட்டு அனுராதாவிடமே கொடுத்து விட்டார்கள்.

இதுவேதான், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் பியூட்டி பார்லரில் ஏற்கெனவே பணம் கேட்டு மிரட்டி மாட்டிக்கொண்ட கும்பலாம்.

நடவடிக்கைக்கு நன்றி சொல்லி, இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம் நாம் பேசியபோது, ''விசாரணை தொடர்கிறது. அதன் முடிவில், வேறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

'மனசாட்சியை விற்றுப் பிழைக்கிற கேவலத்தைவிடவா கொடியது விபசாரம்?' என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது!

நன்றி: ஜுனியர் விகடன்

Monday, September 22, 2008

457. ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமி அஞ்சலி - கி.அ.அ.அனானி

தமிழ் நாட்டில் தான் மின்சார உற்பத்தி பிரச்சினை இருக்கிறதே..ஏதோ நம்மாலானது..கணினியை பயன் படுத்தாமல் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாமே என்று ரொம்ப நாளாக டி.வி பார்க்காமலும், வலைப்பதிவுகளை லுக் உட கணனியை ஆன் செய்யாமலும் இருந்தேன் (இதுனால எனக்கோ அல்லது நாட்டுக்கோ அல்லது தமிழ் கூறும் நல்லுலகுக்கோ எந்த நஷ்டமும் இல்லை அப்படீன்னு நீங்க சொல்லுறதும் சரிதான்) .

ரொம்ப நாளுக்கு பிறகு இன்று தான் 'நிலைமை சீரடைந்து விடும்' என்று ஆற்காடு வீராசாமி கொடுத்த தைரியத்தில் ஒரு பத்து நிமிடம் டி வி பார்த்துக் கொண்டிருந்தேன். விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்று ஏதோ ஒரு நிகழ்ச்சி .  அதில் பேச்சாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ( பல்ப் கண்டு பிடிச்சாரே அவர்தான்) மறைந்த தினத்தில் அமெரிக்கர்கள் "அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து" அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.  தேவாலயத்திலும் கூட வெறும் மெழுகு வர்த்திகளை மட்டும் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார். இதைத்தான நம்ம ஆற்காடு வீராசாமி அமல் படுத்தி தமிழகத்துல தினம் தோறும் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு  அஞ்சலி செலுத்திக்கிட்டிருக்காரு. 

அவருடைய விஞ்ஞானத்தின் மேலான அபரிமிதமான மரியாதைக்கு ஏன் மக்கள் இப்படி அராஜகமா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க அப்படீன்னு ஆச்சரியப் பட்டுக்கிட்டு அப்படியே வேறு சானலுக்கு போனால் அங்கு ஆற்காடு வீராசாமி உண்மையாகவே வீராவேசமாக சாமியாடிக் கொண்டிருந்தார், மேட்டர் என்ன என்றால் மின் வெட்டுக்காக அவரையும் முதலமைச்சரையும் பதவி விலகச் சொல்லி சில பல எதிர்க்கட்சிகள் சொல்லியிருந்ததற்கு அவர் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்?!!!

"தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலும், பின்னர் ஜெயலலிதா காலத்திலும் மின் வெட்டு இருந்திருக்கிறது.அவர்கள் அப்போது பதவி விலகி முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தால் இப்போது எங்களைச் சொல்லலாம்.அப்படி அவர்கள் செய்யவில்லையே" என்று புத்திசாலித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.  அது சரி.. "நீங்க சுயமா யோசிக்க மாட்டீங்களா? நீங்க எதுக்கும் முன்னுதாரணமாக இருக்க மாட்டீங்களா? என்று எழுந்த கேள்விகளை மனதுக்குள் அடக்கிக் கொண்டு அடுத்த சானலுக்கு போகலாம் என்று ரிமோட்டை எடுத்தால் படக்கென்று டி.வி அணைந்து விட்டது.  வேறென்ன "தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமியின் இன்றைய அஞ்சலி " தொடங்கி விட்டது.

---கி.அ.அ.அனானி

Sunday, September 21, 2008

456. இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது? - கி.அ.அ.அனானி

முன்னுரை: ரொம்ப ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. வந்து ஒரு வாரம் ஆகியும், அதை வாசித்து விட்டு இன்று தான் பதிகிறேன் ! கி.அ.அ.அ தாமதத்திற்கு கடுப்பாக மாட்டார் என்று நினைக்கிறேன். கடந்த வாரம் முழுதும் ஆபிஸில் ஒரே ரென்ஷன் !!! இன்னும் சில மேட்டர்களும் அவர் அனுப்பியிருக்கிறார். வாசித்து சென்சார் செய்த பின், அவையும் பிரசுரிக்கப்படும் :) எப்போதும் போல், பின்னூட்டங்களுக்கு அவரே பதில் தருவார், அதாவது கி.அ.அ.அ will stand and play :) கி.அ.அ.அ மேட்டர் கீழே:
**************************************************

ஆயிற்று ...அனேகமாக இந்த வருட கடைசியில் பாராளுமன்றத் தேர்தல் வந்தே விடும் என்று எல்லா தரப்பிலும் பேசத் துவங்கி விட்டனர். கட்சிகள்அதற்கான கூட்டணிகளிலும்,தேர்தல் வியூகங்களிலுமிறங்கத் தயாராகி விட்டனர்.தமிழகத்திலும் சில விலகல்களும் ஈர்த்தல்களும் சேர்த்தல்களும் ,அறிவிப்புகளும் நடக்கத் தொடங்கி விட்டன.கருணாநிதியும் நாளொரு இலவசம், பொழுதொரு திட்டம் எனத் தயாராகி விட்டார். ஜெ தரப்பில் சுறு சுறுப்பாக அறிக்கைகளும், காஸ் விலை முதல் கக்கூஸ் அடைத்துக் கொண்டது வரையிலான அனைத்து விஷயங்களுக்கும் மறியல் போராட்டங்கள் என போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது..நிரந்தர எதிரியும் கிடையாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும் கூட ஓட்டு அரசியலுக்கு ஏற்றவாறு அமையும் சில கூட்டணி முடிவுகளை ஒரு தேர்தல் வரையாவது அனுமானிக்க முடியும்.

உதாரணமாக வரும் தேர்தலில் பமக திமுக உறவு என்பது நடவாத ஒரு விஷயம் .

அதே போல திமுகவும் காங்கிரஸுடனான தங்களது உறவுக்காக ( தமிழகத்தில் மீதமுள்ள மூன்றாண்டு ஆட்சிக் காலத்தையும் கணக்கில் கொண்டே கூட்டணியை நீட்டிக்க தி மு க ஆவல் கொண்டுள்ளது) கம்யூனிஸ்டுகளை உதறத் தயாராகி விட்டனர்.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பெரியதாக எந்த சாய்ஸும் இல்லை. பாஜக இல்லாத அதிமுக கூட்டணி அல்லது ஒரு மூன்றாவது கூட்டணி என்பதில் இரண்டில் ஒன்றுதான் இவர்களது முடிவாக இருக்கமுடியும்( தனித்துப் போட்டி என்ற தற்கொலை முயற்சியை தவிர்த்து)

அதிமுகவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளா / பாஜகவா என்று வரும் போது அவர்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.அதில்தான் அவர்களுக்கு ஆதாயம்.கம்யூனிஸ்டுகளுக்கு தொழிற்சங்கங்களில் உள்ள செல்வாக்கு மற்றும் உறுப்பினர் பலம் இரண்டும் பஜகவிற்கு தமிழகத்தில் கிடைக்கும் ஓட்டுக்களை விட அதிகம் என்பது கண்கூடு.அதுவும் தவிர தேர்தலுக்கு பின் ஒரு வேளை பஜக அரசு அமையும் பட்சத்தில் ஜெயலலிதா எந்த குற்ற உணற்வோ அல்லது கூச்சமோ இல்லாமல் கம்யூனிஸ்டுகளை கை கழுவி விட்டு பா ஜ க அரசில் ஐக்கியமாகி விடும் சந்தர்ப்பம் மிக அதிகம் ( இதற்குத் தேவை சில எம் பிக்கள் மட்டுமே) ஆட்சியமைக்க எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பாஜகவும் இவர்களை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்பதும் திண்ணம்.

மற்ற கட்சிகளைக் கணக்கில் கொண்டால் வைகோ அனேகமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதிமுகா கூட்டணியில்தான் இருப்பார்( இதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் செஞ்சி ராமசந்திரன் குழுவை தி மு க ஆதரித்து மதிமுகவை உடைக்க முயன்றது..அதனால் அதிமுகவுடன் சீட் பேரம் படியாவிட்டாலும் கூட இந்தத் தேர்தல் முடியும் வரையிலாவது வைகோ கலைஞர் தோளில் சாய்ந்து பழங்கதை பேசி கண்ணீர் விடும் நாடகம் அரங்கேர வாய்ப்பில்லை.)

பமகவைப் பொறுத்த மட்டில் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தற்கொலை முடிவைத் தவிர அவர்களிடம் உள்ள ஒரே சாய்ஸ் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான்.(ஏனெனில் விஜயகாந்துடன் இணைந்தால் கூட்டணியில் யார் பெரியண்ணன் என்று ஏற்படும் முரண்பாட்டை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள்...அடுத்த தேர்தல் வரையிலாவது)இதனாலேயே அதிமுகவை நோக்கிய தங்களது காய் நகர்த்தலை தொடங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

கருணாநிதி போன தேர்தலில் இரண்டு ரூபாய் அரிசியும் இலவச கலர் டி வி யும் , ஒட்டுப் போட்ட துணிபோல கொள்கையில்லாத கூட்டணியும் ஆட்சியைப் பெற்றுத்தந்தது போலவே இந்த முறையும் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் அறிவிப்புகளையும் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி,50 ரூபாய்க்கு 10 மளிகை சாமான் என்பது போல பம்மாத்துத் திட்டங்களை அள்ளி விடத் தொடங்கி விட்டார்..தனது /காங்கிரஸ் ஆட்சியின் தோல்விகளும் ,வாரிசு அரசியலால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயராலும், கூட்டணியின் விரிசல்களாலும் ஆட்சியின் அடித்தளம் ஆடிப் போயிருப்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.

காங்கிரசையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியையும் அறிவித்து விடுவார் போலத்தான் தெரிகிறது.அதில் கோஷ்டி சண்டையும் பூசலும் குழப்பமும் அன்றி வேரெதுவும் மிஞ்சப் போவதில்லை.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் ஒரு சேர அதிகார பலம் மிக்க பதவிகள் கிடைத்தும் மக்களுக்காக ஒன்றும் கிழிக்காதவர்கள், உருப்படியாக எந்த ஒரு மக்கள் நல தொலை யோக்கு திட்டத்தையும் நிறைவேற்ற லாயக்கற்றவர்கள் அடுத்த முரை வெற்றி பெற்றால் என்ன சாதித்து விடப் போகிறார்கள். அதிலும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஒரு இடத்தில் இவர்களது ஆட்சியும் மற்ற இடத்தில் எதிர் அணி ஆட்சியோ இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இவர்களுக்கு ஓட்டுப் போடுவது பாலுக்காக மலட்டு மாட்டை வாங்குவது போன்றது.

ஜெயலலிதாவைப் பொருத்த வரை அவருக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.ஏதோ பிக்ஸட் டெபாஸிட்டில் போட்டிருந்த பணம் 5 வருடம் கழித்து மெச்சூராகி கைக்கு வருவது போல் அடுத்து எனதாட்சிதான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்...போன முறை ஆட்சியில் இருந்த போது நான் என்ன சாதித்தேன்..இப்போது எதிர்க்கட்சியாக என்ன கிழித்தேன் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே இல்லை. கருணாநிதியின் மாற்று நான் மட்டுமே என்பதாக மமதையில் அலைகிறார்.இதனால் இவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தேரும் என்பது கிட்டத்தட்ட உணரமுடிகிறது. இவர்களுக்கு ஓட்டுப் போடுவதென்பது கிட்டத்தட்ட உயிர் போகும் என்று தெரிந்தே கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

இதற்கு ஒரே மாற்று தமிழகத்தில் ஒரு மூன்றாவது அணி உருவாவதே ஆகும்.அந்த மூன்றாவது அணியை உருவாக்கக் கூடிய ஒரே நம்பிக்கை இந்தத் தேர்தலைப் பொறுத்த மட்டிலும் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பா.ம.க ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக களம் இறங்குவது என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு ஆட்சியை தரவல்ல சூழலை ஏற்படுத்துவதோடு, கேப்டனின் முதலமைச்சர் கனவுக்கும் அது ஏற்றமாதிரி அமையும்.

விஜகாந்திடம் கொள்கை இருக்கிறதா?அனுபவம் இருக்கிறதா? நடிகர் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட கேள்விகளையும் ஆட்சேபணைகளையும் வீசலாம்.ஆனால் அதையெல்லாம் கடந்து இந்த அதிமுக, திமுக என்ற இரு நோய்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஒரு இடைக்கால நிவாரணி என்ற அளவிலாவது அவருக்கு ஒரு சந்தர்பம் தருவதில் எந்தத் தவறும் இல்லை.விஜயகாந்த் தவறுகள் செய்திருக்கலாம்.ஆட்சி அனுபவமோ அல்லது அரசியல் தந்திரமோ,புள்ளி விவரங்களோ ,பேச்சு வன்மையோ பெற்றவராக இல்லாதிருக்கலாம்.ஆனால் இது வரை ஆட்சியில் இருந்த யாரும் புனிதருமல்ல,பிறவி மேதைகளாக வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை.அதனால் விஜயகாந்தும் வெற்றி பெற்று பின் அரசியல் அனுபவம் பெறுவதனால் எந்த குடியும் முழுகி விடப் போவதுமில்லை.

அவரது நிறைகள் என்று பார்த்தோமானால்

ரஜினிகாந்த் மாதிரி இத்தனை ரசிகர் பலம் இருந்தும் , ஜெயிப்போம் என்ற நிலைமை இருந்தும் அரசியலில் இறங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டு வெறும் "வாய்ஸ்" மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காமல் துணிந்து இறங்கியது.

ஏதாவது ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பதவிகளும் மற்ற பிறவற்றையும் அனுபவிக்கும் நிலை இருந்தும், சரியோ தவறோ தனிக் கட்சி ஆரம்பித்து நடத்துவது

அப்படி ஆரம்பித்த கட்சியை வெற்றிகரமாக 4 ஆண்டுகளாக நடத்துவது

எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று சொன்னதுமில்லாமல் இரண்டு தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுக் காட்டியது

இன்ரைய காலகட்டத்தில் கருணாநிதி, ஜெயலலித என்ற இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஓரளவு பெயரெடுத்த ஒரே கட்சி விஜயகாந்தின் கட்சி மட்டுமே


ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை போன்ற சில விஷயங்களுக்காக் இவர் நடத்திய போராட்டங்கள் அரசையே சற்றே நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளதென்பதும் உண்மை

அதனால் தான் சொல்கிறேன்..இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது ???

Tuesday, September 16, 2008

455. மங்களூர்-உடுப்பி மதக்கலவரம்

ஒரிஸாவில் இப்போது தான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிற நேரத்தில், மங்களூரிலும் உடுப்பியிலும் கலவரம் வெடித்துள்ளது.  மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு சில இந்து அமைப்புகள் கலவரத்திற்கு தூபம் போட்டுள்ள செயல் கடுமையான கண்டனத்துக்குரியது.  கர்னாடகாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிஜேபி இது போன்ற கலவரங்களை வேடிக்கை பார்க்காமல், முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.  தீவிர இந்துத்வா முத்திரை குத்தப்படுவதால் பிரச்சினைகள் அதிகமாகின்றனவே அன்றி சுமுகமான தீர்வுகள் பிறப்பதில்லை !

New Life Fellowship என்ற கிறித்துவ அமைப்பு, இந்துக் கடவுளர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில் பிரசுரங்கள் தயாரித்து விநியோகித்தது தான் தேவலாயங்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு மூல காரணம் என்று சில இந்து அமைப்புகள் கூறுகின்றன.  எது எப்படியிருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சரியாகாது, இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது ! 

கர்னாடகா அரசு சற்று சுதாரித்துக் கொண்டு பலரை கைது செய்துள்ளது. போலீஸ் பந்தோபஸ்த்தையும் அதிகரித்துள்ளது. முதல்வர் எட்டியூரப்பா, சேதம் அடைந்துள்ள தேவாலயங்களை சீரமைக்கும் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.  உருப்படாத காங்கிரஸ் மற்றும் தேவகௌடாவின் ஜனதா தள தலைவர்கள், கர்னாடகாவின் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பேசியிருக்கின்றனர்.  சிவராஜ் பாட்டில் போன்ற ஒரு மத்திய உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டு வக்கற்ற காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் ஆகாது !!! 

எ.அ.பாலா

Saturday, September 13, 2008

454. தில்லியில் தொடர் குண்டுவெடிப்பும் துப்பு கெட்ட அரசும்

இன்று மாலை 6.15 மணி அளவில் சுமார் 45 நிமிடங்களில் தில்லியில் 5 இடங்களில் குண்டு வெடித்ததில், இது வரை வந்த செய்திகளின்படி, சுமார் 20 பேர் பலியாயினர், 90 பேர் காயம். கரோல் பாக், பரகாம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. டிவி செய்திகளில், சிதறடிக்கப்பட்டவர்களையும், அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களையும் பார்த்தபோது நெஞ்சம் கனத்துப் போனதோடு, இரக்கமற்ற தீவிரவாத அரக்கர்கள் மீதும், காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத, பொறுப்பில்லாத, திடமில்லாத அரசு சார்ந்த அமைப்புகள் மீதும் அசாத்திய கோபம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் என்று தீவிரவாதம் திட்டம் தீட்டி துல்லியமாக நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியும், உருப்படியாக எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கத் துப்பில்லாமல், சதாசர்வ காலமும், அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேற்றுவது ஒன்றை மட்டுமே தனது வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பிரதமரும், அவரது லாயக்கற்ற சகாக்களும் தான் இந்த அவல நிலைக்கு முழு பொறுப்பு :(

தீவிரவாததிற்கு எதிராக மத்திய அரசு தானும் எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல், பெருமளவு பாதிப்புக்கு ஆளான குஜராத்தில் மோடி தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்து வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ள கேவலமான செயல் குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!

அநியாயமாக உயிரிழந்த அப்பாவிகளுக்கு என் அஞ்சலியையும், நாடாளும் தகுதியற்ற இந்த மத்திய அரசுக்கு எதிரான என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails